மாமல்லபுரம் கடலில் மாயமான 4 மாணவர் உடல்கள் கரை ஒதுங்கின
மாமல்லபுரம் கடலில் மாயமான 4 மாணவர் உடல்கள் கரை ஒதுங்கின
ADDED : மார் 04, 2024 05:34 AM

மாமல்லபுரம் : ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில் இயங்கி வரும் எஸ்.வி.சி.ஆர்., அரசு கல்லுாரியை சேர்ந்த 18 மாணவர்கள் மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவர்கள் 24 பேர், தனித்தனி குழுவாக நேற்று முன்தினம் காலை மாமல்லபுரம் வந்தனர்.
இவ்விரு கல்லுாரி மாணவர்களும் கடற்கரை கோவில் அருகே, கடலில் குளித்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட நீர்ச்சுழலில் சிக்கிய அவர்களை, அலை இழுத்து சென்றது.
இதைப் பார்த்த உள்ளூர் மீனவர்கள் சிலர், கடலில் தத்தளித்த மாணவர்கள் ஆறு பேரை காப்பாற்றி கரை சேர்த்தனர்.
இதில், எஸ்.வி.சி.ஆர்., கல்லுாரி இரண்டாமாண்டு மாணவர் விஜய், 18, அங்கேயே உயிரிழந்தார். தனியார் கல்லுாரியைச் சேர்ந்த இரண்டாமாண்டு மாணவர் கார்த்திக், 19, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
எஸ்.வி.சி.ஆர்., கல்லுாரி இரண்டாமாண்டு மாணவர்கள் மோனிஷ், 18, பிரபு, 19, மற்றும் தனியார் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் பெத்திராஜ், 21, சேஷாரெட்டி, 19, ஆகிய நான்கு பேர் கடலில் மாயமாகினர்.
தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படையினர், கப்பல் படையினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று காலை 11:15 மணியளவில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி பகுதி கடற்கரையில், சேஷாரெட்டியின் உடல் கரை ஒதுங்கியது. பிற்பகலில், ஒற்றை வாடை தெரு பகுதி கடற்கரையில் மோனிஷ், 19, உடலும், மாலையில் பெத்திராஜ், 22, பிரபு, 19, ஆகியோர் உடல்களும் கரை ஒதுங்கின.
மாமல்லபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

