ADDED : ஆக 18, 2025 01:50 AM
பாபநாசம்: கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியதால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி, 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சருக்கையை சேர்ந்த அறிவழகன் மகள் கனிஷ்மா, 14; பாபநாசம் அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். இளையமகள் கேசவர்த்தினி, 12; ஏழாம் வகுப்பு படிக்கிறார்.
இருவரும், தோழி சகானா, 9, என்பவருடன், நேற்று முன்தினம் மாலை, கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். ஆற்றில் மணல் அள்ளிய பள்ளம் இருப்பது தெரியாமல், மூவரும் நீரில் மூழ்கினர். அவர்களின் அலறல் கேட்ட அக்கம் பக்கத்தினர், கேசவர்த்தினி, சகானா ஆகிய இருவரை காப்பாற்றினர். கனிஷ்மா ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்.
பாபநாசம் தீயணைப்புப்படையினர், கபிஸ்தலம் போலீசார் கனிஷ்மாவை தேடினர். இரண்டாவது நாளாக நேற்றும் தேடியபோது, புதருக்குள் சிக்கியிருந்த கனிஷ்மா உடல் மீட்கப்பட்டது. இறந்த கனிஷ்மாவின் தாய், சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்தது குறிப்பிடத்தக்கது.