நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 02, 2025 02:09 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடல் நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் கவின், கடந்த 27ம் தேதி திருநெல்வேலியில் சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்டார். சுர்ஜித் சகோதரியை, கவின் காதலித்தார் என்பதற்காக ஜாதி ரீதியாக இந்த கொலை நடந்தது.
இக்கொலையில் சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ.,சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயார் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பெற்றோர் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரால் திரும்ப பெறப் படாமல் இருந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் உள்ளிட்ட தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், கவின் குடும்பத்தினரிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று உடலை பெற்றுக் கொண்டனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்த உடலுக்கு அமைச்சர் நேரு, எம்.எல்.ஏ.,க்கள் அப்துல் வஹாப், ராஜா, கலெக்டர் சுகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கவின் உடலை தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன் உள்ளிட்டோர் வாகனங்களுடன் ஊர்வல மாக சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
ரூ. 6 லட்சம் இழப்பீடு கொலை செய்யப்பட்ட கவின் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அரசு சார்பில் ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதன் முதற்கட்ட தொகை ஆறு லட்சத்தை தமிழ்நாடு பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூக ஆணைய தலைவர் தமிழ்வாணன், கவின் பெற் றோரிடம் வழங்கினார்.
முன்னதாக அவர் திருநெல்வேலியில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரி களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.