இரவில் வரும் குண்டு மிரட்டல் குறித்து காலையில் தான் புகார் செய்கின்றனர் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சலிப்பு
இரவில் வரும் குண்டு மிரட்டல் குறித்து காலையில் தான் புகார் செய்கின்றனர் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சலிப்பு
ADDED : அக் 09, 2025 07:13 PM
சென்னை:இரவு, பகல் என , வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால், சோதனை செய்தே சலிப்பு ஏற்பட்டு விட்டதாக, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
தமிழக காவல் துறையின் கீழ் பணிபுரியும் நாங்கள், ராணுவத்தில் இருந்தவர்கள். வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதில் தொழில்நுட்ப ரீதியாக பயிற்சி பெற்றவர்கள். தேசிய பாதுகாப்பு படை, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியிலும் பயின்றவர்கள்.
நம் நாட்டு எல்லையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை, பாக்., ராணுவ வீரர்கள் வீசி விடுவர். அதை செயலிழக்கச் செய்வது சற்று சிரமம் தான். அதை விட, இலங்கை ராணுவத்திற்கு எதிராக போராடிய விடுதலை புலிகள் வைக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவது சவாலானது.
'டார்ச் லைட்' வெளிச்சம் பட்டாலே, அதன் வெப்பத்தில் வெடிக்கும் தன்மை உடையதாக, அந்த கண்ணிவெடிகள் இருக்கும். அதுபோன்ற சவால் நிறைந்த கால கட்டத்தில் துணிச்சலாக பணியாற்றி உள்ளோம்.
தமிழகத்தில், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவில், 120க்கும் மேற்பட்டோர் உள்ளோம். இதற்கு முன், வெடி குண்டு மிரட்டல் என்ற தகவல் கிடைத்த உடனேயே உஷாராகி விடுவோம்.
தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. ஓராண்டுக்கு மேலாக மர்ம நபர்கள், 'இ - மெயில்' வாயிலாகவே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கின்றனர்.
'இன்னும் சில நிமிடங்களில் வெடிகுண்டு வெடித்து சிதறி விடும்' என, இரவு நேரத்தில் பூட்டி கிடக்கும் அலுவலகத்திற்கு, இ - மெயிலில் மிரட்டல் வருகிறது. அந்த தகவல், எங்களுக்கு காலையில் தான் சொல்லப் படுகிறது.
நாங்களும் வேறு வழியின்றி சோதனை செய்கிறோம். மத்திய அரசு அலுவலகம் ஒன்றுக்கு காலை, 11:00 மணிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், எங்களுக்கு மாலை, 5:00 மணிக்கு தான் சொல்லப்பட்டது. நல்ல வேளையாக எதுவும் நடக்கவில்லை.
இதுபோன்ற காலதாமதம் எங்களை பதற்றமடையச் செய்கிறது. முதல்வர் ஸ்டாலின் வீடு, கவர்னர் மாளிகை, நடிகையர் நயன்தாரா, திரிஷா, நடிகர் எஸ்.வி.சேகர் வீடுகள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளுக்கு பல முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
நாங்களும் இரவு, பகல் என, வெடிகுண்டு சோதனை நடத்தி சலித்து போய் விட்டோம். இப்போதெல்லாம் வெடிகுண்டு மிரட்டல் என்ற தகவல் வந்தாலே, எங்களிடமே வேகம் குறைந்து காணப் படுவதை உணர முடிகிறது.
இத்தகைய வெடிகுண்டு மிரட்டல்கள் எங்களை பாடாய் படுத்துகிறது. போலீஸ் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, அறிவியல் ரீதியாக புலனாய்வு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடும் நபர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.