வேளாண் விளைபொருளை மதிப்பு கூட்டும் ஆலைகள் 11 இடங்களில் அமைக்கிறது கூட்டுறவு துறை
வேளாண் விளைபொருளை மதிப்பு கூட்டும் ஆலைகள் 11 இடங்களில் அமைக்கிறது கூட்டுறவு துறை
ADDED : அக் 09, 2025 07:13 PM
சென்னை:திருவள்ளூரில் வேர்க் கடலை உடைக்கும் ஆலை , ராணிப்பேட்டையில் கேழ்வரகு அரவை ஆலை, மதுரையில் சிறுதானியங்கள் ஆலை என, 11 இடங்களில், வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் ஆலைகள் அமைக்கும் பணியை, கூட்டுறவு துறை துவக்கியுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 115 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் செயல்படுகின்றன.
உள்கட்டமைப்பு வசதி இவை, விவசாயிகள் சாகுபடி செய்யும் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க ஏலக்கூடங்கள், உலர் களங்கள், கிடங்குகள், உற்பத்தி ஆலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன.
தற்போது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தென்காசி உட்பட மாநிலம் முழுதும், 11 இடங்களில், 2.50 கோடி ரூபாயில் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் ஆலைகள் அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
தரமான பொருட்கள் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூட்டுறவு விற்பனை சங்கங்களில் அரிசி ஆலை, பஞ்சாலை, மிளகாய் அரவை ஆலை, எண்ணெய் ஆலை போன்றவை உள்ளன. அவற்றின் வாயிலாக விளைபொருட்களை பதப்படுத்துவது, மதிப்பு கூட்டுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அடுத்தக்கட்டமாக, விளைபொருட்களை மதிப்பு கூட்டும் 11 ஆலைகள், அடுத்தாண்டு துவக்கத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
அவற்றில் தயாரிக்கப்படும் பொருட்கள், கூட்டுறவு சங்கங்களின் பல்பொருள் அங்காடிகள், ரேஷன் கடைகளில் விற்கப்படும். இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதுடன், மக்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இடம் பொருள்
திருவள்ளூர் வேர்க்கடலை உடைக்கும் ஆலை
அரக்கோணம் கேழ்வரகு அரவை ஆலை
திருவண்ணாமலை உளுந்து பதனிடும் ஆலை
சங்கரன்கோவில் பச்சைப்பயறு ஆலை
செங்கோட்டை கோதுமை அரவை ஆலை
ஆலங்குடி வேர்க்கடலை உடைக்கும் ஆலை
ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆலை
பட்டுக்கோட்டை சம்பா கோதுமை அரவை ஆலை
மதுரை வாடிப்பட்டி சிறுதானிய ஆலை