ADDED : அக் 16, 2025 09:29 PM
சென்னை:மதுரை மாவட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை செல்ல இருந்தபோது, பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்ததை நேரில் பார்த்த சாட்சிகள் இருவர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கடந்த 2011ம் ஆண்டு, அக்., 28ம் தேதி தமிழகத்தில் ரத யாத்திரை பயணம் மேற்கொண்டார்.
இவரது யாத்திரை செல்ல இருந்த, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, ஆலம்பட்டி ஓடை பாலத்திற்கு கீழ், பயங்கரவாதிகள் பைப் வெடிகுண்டுகளை வைத்து, அத்வானியை கொல்ல முயன்றனர்.
அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன், பைப் வெடிகுண்டுகளை போலீசார் அகற்றினர்.
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், 59, கடந்த ஜூலை 1ம் தேதி, தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அத்வானியை கொல்ல, பைப் வெடிகுண்டு வைத்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டது அபுபக்கர் சித்திக் தான் என்பது தெரிய வந்தது. மேலும், அந்த பைப் வெடிகுண்டையும் அவர் தான் தயாரித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அபுபக்கர் சித்திக், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அத்வானியை கொல்ல பயங்கரவாதிகள் பைப் வெடிகுண்டு வைத்ததை நேரில் பார்த்த, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாட்சிகள் இருவர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
அவர்களின் பாதுகாப்பு கருதி, பெயர்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.