ADDED : செப் 20, 2025 03:07 AM

சென்னை:சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில், நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வசித்து வருகிறார். அவரது வீட்டை சுற்றி, பிரமாண்டமான மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் காரணமாக, மத்திய அரசு, விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது.
இதனால், அவரது வீட்டில், துணை ராணுவப் படை வீரர்கள், 8 முதல் 11 பேர் சுழற்சி முறையில், அதிநவீன துப்பாக்கியுடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன், 24 மணி நேரமும், தொண்டர்கள் விஜயை நெருங்க விடாமல், துாக்கி வீசும் பவுன்சர்கள் மற்றும் காவலாளிகள், பாது காப்பு பணியில் உள்ளனர்.
இவர்களை எல்லாம் மீறி, விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக, அவரது வீட்டு பின்புறம் வழியே, வாலிபர் ஒருவர் நேற்றுமுன்தினம் உள்ளே புகுந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் வீட்டிற்குள் வாலி பர் புகுந்ததைத் தொடர்ந்து, வீடு முழுதும், மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நேற்று சோதனை நடத்தினர். மர்ம பொருள் ஏதும் சிக்கவில்லை.
இதற்கிடையே, விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரது தரப்பில் நீலாங்கரை காவல் நிலையத்தில், நேற்று புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

