அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அமைச்சர் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்
அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அமைச்சர் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : நவ 01, 2025 12:46 AM
சென்னை: அமைச்சர் நேரு பெயரை பயன்படுத்தி, அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு, மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த நேரு, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக உள்ளார்.
இவரது துறையில், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, 2,538 பேரை தேர்வு செய்ததில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், இதில், நேருவின் தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆதாரங்களை, தமிழக காவல் துறையின் பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகள் அனுப்பி உள்ளனர்.
மேலும், நேருவின் மகனும் பெரம்பலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யுமான அருண், இத்துறையில் சிலரை நியமிக்க பரிந்துரை செய்தது பற்றிய ஆதாரங்களும், அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்து உள்ளன. அது பற்றியும் விசாரணை நடக்கிறது.
இச்சூழலில், நேரு பெயரை பயன்படுத்தி, மர்ம நபர்கள், அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தின் இ - மெயிலுக்கு அனுப்பியுள்ள தகவலில், 'நேரு மீது வழக்குப்பதிவு செய்தால், திராவிடர்களாகிய நாங்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்' என, மிரட்டியுள்ளனர்.
இதனால், சென்னை நு ங்கம்பாக்கம், சாஸ்திரி நகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் வி சாரித்து வருகின்றனர்.

