ADDED : டிச 26, 2025 02:01 AM
சென்னை: சென்னையில் உள்ள வங்கதேச துணை துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஹிந்து இளைஞரான தீபு சந்திரதாஸ் அடித்து கொல்லப்பட்ட சம்பவம், அங்கு பெரும் புயலை கிளப்பி உள்ளது. இக்கொலையை கண்டித்து, நம் நாட்டில் டில்லி உள்ளிட்ட இடங்களில், விஷ்வ ஹிந்து பரிஷத், சர்வ பாரதிய ஹிந்தி பெங்காலி சங்கம், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.
வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சென்னை மயிலாப் பூரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, இ - மெயிலில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதில், 'சென்னை, தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள, வங்கதேச துணை துாதரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தேனாம்பேட்டை போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், துாதரகத்தில் சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் புரளி என, தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து, தேனாம்பேட்டை போலீசார் மற்றும் மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

