ADDED : செப் 08, 2025 02:08 AM

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு, நேற்று, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை தி.நகரில், தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இங்கு, தினமும் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்து, கட்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்வர். இதனால், அந்த அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், கமலாலயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை, 9:30 மணிக்கு மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். மோப்ப நாய்களுடன், கமலாலயத்திற்கு வந்து தீவிர சோதனை நடத்தினர். அனைத்து பகுதிகளிலும் முழுதுமாக சோதனை செய்ததில், வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல், வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.