ADDED : மார் 23, 2026 10:17 PM

விழுப்புரம்: விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு, வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், மதியம் 1:15 மணிக்கு வெடிக்கும் என நேற்று அலுவலகத்திற்கு இ-மெயில் வந்தது.
இதையடுத்து, எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் குழுவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு தீனதயாளன் ஆகியோர் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் மூலம் அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலக கோப்பு அறைகள், வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. வெடிகுண்டு கிடைக்காததால், அது வெறும் வதந்தி என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் மெயில் எங்கிருந்து வந்தது. அனுப்பியது யார் என்ற விபரம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

