முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 04, 2025 01:19 AM
சென்னை:முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா, நடிகர் எஸ்.வி.சேகர் வீடுகளுக்கும், கவர்னர் மாளிகை, விமான நிலையம் மற்றும் தமிழக பா.ஜ., அலுவலகத்திற்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், தனித்தனியாக ஐந்து இ - மெயில்களை அனுப்பி உள்ளனர்.
அதில், 'சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு, நடிகை திரிஷா வீடு, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை, மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, தி.நகர் வைத்திய ராமன் சாலையில் உள்ள தமிழக பா.ஜ., அலுவலகத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.
'விடிவதற்குள் எல்லா இடங்களும் தரைமட்டமாகி விடும்' என, மிரட்டல் விடுத்து உள்ளனர்.
அதேபோல, சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கும் மர்ம நபர்கள், மிரட்டல் இ - மெயில் அனுப்பி உள்ளனர்.
அதில், விமான நிலையத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீடுகள் உட்பட ஆறு இடங்களிலும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விடிய விடிய சோதனை நடத்தினர்.
வெடிபொருட்கள் ஏதும் சிக்காததால், புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.