நிலுவை தொகை செலுத்தினால் உடனே பத்திரம்: வீட்டு வாரியம்
நிலுவை தொகை செலுத்தினால் உடனே பத்திரம்: வீட்டு வாரியம்
ADDED : மார் 17, 2024 06:44 AM

சென்னை: 'வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், நிலுவை தொகையை ஒரே தவணையாக செலுத்தினால், உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படும்' என்று, வீட்டுவசதி வாரியம் அறிவித்துஉள்ளது.
தமிழகத்தில் வீட்டுவசதி வாரிய திட்டங்களில், பொது மக்கள் வீடு ஒதுக்கீடு பெறுகின்றனர். இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையை தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால், ஏதாவது காரணங்களால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தவணை செலுத்த தவறியுள்ளனர்.
இவ்வாறு தவணை தவறியவர்களுக்கு வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால் நிலுவை தொகை அதிகரிக்கிறது. இந்நிலையில், ஒரே தவணையாக அனைத்து நிலுவை தொகையையும் செலுத்துவோருக்கு, சில சலுகைகள் வழங்க வீட்டுவசதி வாரியம் முன்வந்துள்ளது.
சென்னையில், அண்ணா நகர், கே.கே.நகர், பெசன்ட் நகர், ஜெ.ஜெ., நகர் கோட்டங்களுக்கு உட்பட்ட திட்டங்களுக்கு இச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நிலுவை தொகையை ஒரே தவணையாக செலுத்துவோருக்கு உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படும்.
வீடு, மனை ஒதுக்கீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களை அணுகி இச்சலுகையை பெறலாம் என்று வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.
பொதுவாக நிலுவை தொகை செலுத்தியவர்கள் பத்திரத்துக்கு அலையும் நிலையில், உடனடியாக பத்திரம் கிடைப்பது ஒதுக்கீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

