ADDED : பிப் 12, 2025 12:21 AM
சென்னை:முகூர்த்த நாளான நேற்று முன்தினம் பத்திரப்பதிவுக்கு, கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டதால், 238 கோடி ரூபாய் வசூலானதாக, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
தமிழகத்தில் முகூர்த்த நாட்களில், சொத்து வாங்குவதற்கான பத்திரங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவுக்கு தாக்கலாகின்றன. இதை கருத்தில் வைத்து, முகூர்த்த நாட்களில் சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
இதுதொடர்பாக, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:
பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில், முகூர்த்த நாளான நேற்று முன்தினம் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி, பொதுமக்கள், 23,421 பத்திரங்களை நேற்று முன்தினம் பதிவு செய்தனர். இதன்வாயிலாக, 237.98 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் டிசம்பர், 5ல், ஒரே நாளில் பத்திரப்பதிவு வாயிலாக, அதிகபட்சமாக, 238 கோடி ரூபாய் வசூலானது. இதையடுத்து, இரண்டாவது முறையாக நேற்று முன்தினம், 238 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதன் வாயிலாக, நடப்பு நிதியாண்டில் வருவாய் ஈட்டுவதில், பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.