சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயிலில் முன்பதிவு முடிந்தது; கூடுதலாக இயக்கப்படுமா
சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயிலில் முன்பதிவு முடிந்தது; கூடுதலாக இயக்கப்படுமா
ADDED : ஆக 13, 2025 01:27 AM

ஸ்ரீவில்லிபுத்துார்; ஆக., 14 சென்னையில் இருந்து மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக செங்கோட்டைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலிலும் முன்பதிவு முடிந்து வெயிட்டிங் லிஸ்ட் அதிகம் உள்ளது. இதனால் சென்னையிலிருந்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் வழியாக செங்கோட்டைக்கு கூடுதலாக ஒரு சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆக., 15, 16, 17 (சுதந்திர தினம், சனி, ஞாயிறு) தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் ஊர் வந்து செல்வர்.
இவர்கள் மதுரை, விருதுநகர், தென்காசி செல்ல கொல்லம், பொதிகை, தாம்பரம்- செங்கோட்டை ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ரயில்களில் அதிகளவு வெயிட்டிங் லிஸ்ட் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் இருந்து மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு ஒரு சிறப்பு ரயில் ஆக., 14 இரவு 9:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டை வருவதாக இயக்கப்படுகிறது. முன்பதிவு துவங்கிய நிலையில் தற்போது இந்த ரயிலில் மட்டும் 400 க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
கொல்லம், பொதிகை, தாம்பரம்- செங்கோட்டை அதி விரைவு ரயில்களிலும் அதிக அளவில் பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
ஆக., 14 இரவு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். மறுமார்க்கத்தில் ஆக.,17 இரவு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7:00 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்க மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டத்தினர் எதிர்பார்க்கின்றனர்.