ADDED : ஏப் 23, 2023 12:26 AM

எத்தகைய நற்செயல்கள் செய்தாலும், அதற்கான அங்கீகாரம் இல்லாமல் போனால், அச்செயல் அர்த்தமற்றதாகி விடும். அந்த வரிசையில் தான், புத்தக வாசிப்பும், புத்தக பதிப்பும் இடம் பெற துவங்கியிருக்கிறது.
'இன்றைய இளைய சமுதாயம் டிஜிட்டல் உலகில், சிறகடித்து பறந்தாலும், புத்தகங்களை புரட்டி படிக்கும் வழக்கம், பழக்கத்தில் இருந்துகொண்டே இருக்க வேண்டும்' என்கின்றனர், கல்வியாளர்கள்.
வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து, உச்சம் தொட்ட பல தலைவர்களின் வெற்றிக்கு பின்னால், ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன என்பது மறுக்க இயலாத உண்மை.
இன்று, உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்; எப்படி இருக்கிறது இந்த துறை... மனப் பக்கத்தில் புதைந்துள்ள கருத்துக்களை பகிர்ந்தனர் சில பதிப்பாளர்கள்:
எழுத்தாளர்சுப்ரபாரதி மணியன்:
கலை, இலக்கியம் சார்ந்த படைப்புகளை, அதிலும் ஒரு சிலர் மட்டுமே எழுதி வந்த நிலை மாறி, இன்று, அனைத்து தரப்பு மக்களும், தினசரி வாழ்க்கையில் தாங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்களை கூட கதையாக எழுதுகின்றனர்; கவிதையாக வடிக்கின்றனர்.
எழுத்தாளர்கள் அதிகரித்து விட்டனர். இருப்பினும், புத்தகத்தை அச்சு வடிவில் படிக்கும் ஆர்வம் குறைந்திருக்கிறது; மாறாக, அதே புத்தகத்தை, 'பி.டி.எப்.,' வடிவில் எவ்வித அனுமதியுமின்றி, சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதை படிக்கின்றனர். இதனால், பதிப்பாளர்கள், பொருளாதார நிலையில் பாதிக்கின்றனர். எனவே, தமிழக அரசு, நுாலகங்களுக்கு அதிகளவு புத்தகங்களை வாங்க வேண்டும்.
பதிப்பாளர்இளஞாயிறு:
நான் படைப்பாளியாக இல்லாவிட்டாலும், படைப்பாளர்களின் படைப்புகளை புத்தமாக அச்சிட்டு வெளியிடுகிறேன்; இதனால், லாபம் எதுவும் இல்லை. புத்தக வாசிப்பின் மீதுள்ள நேசத்தால் இப்பணியை செய்து வருகிறேன்.
தற்போதைய சூழலில் எழுத்தாளர்கள் அதிகரித்து வருகின்றனர். அதே நேரம், சமூக ஊடகங்கள் வாயிலாக படிக்கும் பழக்கம், புத்தக பதிப்பு தொழிலை பாதிக்கிறது. தமிழக அரசு மாவட்ட வாரியாக நடத்திய புத்தக கண்காட்சி சிறந்த பலன் வழங்கியதாக, பதிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர். இத்தகைய கண்காட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும்.