ADDED : ஏப் 16, 2024 03:47 AM

சென்னை: தமிழகம் முழுதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி நிறைவடைந்த நிலையில், விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் ஓட்டளிக்க வசதியாக, தேர்தல் கமிஷன் சார்பில், அனைத்து வாக்காளர்களுக்கும், 'பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளது.
இதில், வாக்காளர் பெயர், வயது, முகவரி, அவர் ஓட்டளிக்கும் ஓட்டுச்சாவடி அமைவிடம், வாக்காளர் பட்டியலில் வரிசை எண் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இவற்றை ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்லும்போது, அதில் உள்ள வரிசை எண்ணை வைத்து, அங்குள்ளவர்கள் வாக்காளரை எளிதில் அடையாளம் காண முடியும். ஆனால், பூத் சிலிப்பை அடையாள சான்றாக காண்பிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை அடையாள சான்றுக்கு காண்பிக்க வேண்டும்.
ஓட்டுச்சாவடி அலுவலர்களை வைத்து, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டது. இப்பணியை கடந்த 13ம் தேதிக்குள் முடிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று பூத் சிலிப்புகளை வழங்கினர்.
நேற்று முன்தினம் நிலவரப்படி, 92.82 சதவீதம் பேருக்கு பூத் சிலிப்கள் வழங்கப்பட்டிருந்தன. சில வீடுகளுக்கு சென்றபோது, வீட்டில் யாரும் இல்லை என ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். எனவே, விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் சிலிப் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
பூத் சிலிப் கிடைக்காதவர்கள், 'Voter Helpline' எனும் மொபைல் போன் செயலி மற்றும் தேர்தல் கமிஷன் இணையதளத்தில், தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது தங்கள் பெயர் மற்றும் விபரங்களை குறிப்பிட்டு, 'பூத் சிலிப்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

