கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எல்லை குறித்த பயிற்சி அவசியம் கடலோர காவல்படை ஐ.ஜி., பேட்டி
கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எல்லை குறித்த பயிற்சி அவசியம் கடலோர காவல்படை ஐ.ஜி., பேட்டி
ADDED : செப் 22, 2024 01:22 AM

சென்னை:''கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள், தங்கள் உதவிக்காக வடமாநில மீனவர்களை உடன் அழைத்துச் செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அவர்களில் பலருக்கு முறையான நீச்சல் தெரிவதில்லை,'' என, கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐ.ஜி., டோனி மைக்கேல் கூறினார்.
நம் நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி:
இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்கள் உள்ளன. இங்குள்ள கடல் வளம், மீன்வளம், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, எங்களின் பிரதான வேலை.
ஒருங்கிணைப்பு
தமிழகத்துக்கு இரண்டு கடல் எல்லைகள் உள்ளன. இலங்கை, மாலத்தீவுகளின் முக்கிய சந்திப்புகளில் அவை உள்ளன. அங்கு, இரு கண்காணிப்பு கப்பல்கள் எப்போதும் ரோந்து பணியில் இருக்கும். ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து, படகில் 1 மணி நேரத்தில், இலங்கை கடல் எல்லைக்கு சென்று விடலாம்.
நாட்டின் கடல் எல்லை எங்கு முடிகிறது என்பதை தெரியாத மீனவர்கள், அந்நாட்டு கடற்படையிடம் பிடிபடுகின்றனர். இதுபோல் நடக்காமல் இருக்க, கடல் எல்லைகள் குறித்து, மீனவர்கள் அறிந்து கொள்வது அவசியம். அதற்காக அவர்களுக்கு எல்லைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மீனவர்கள் மீன் பிடிக்கும் போது, நம் கடலோர காவல்படை கப்பல் நிற்கும்; அதை தாண்டி செல்ல வேண்டாம் என, பலமுறை சொல்கிறோம். சிலர் அதை மீறி செல்கின்றனர்.
மீட்பு பணிகள், தொழில்நுட்ப தேவைகள் குறித்த கல்விக்கு, இந்திய கடற்படை மற்றும் மற்ற நாடுகளின் கடலோர காவல்படைகளுடன் இணைந்து செயல்படுகிறோம். இதற்காக, 15 நாடுகளை சேர்ந்த கடலோர காவல்படை அதிகாரிகள், நம் கடலோர காவல் படையினருக்கு பயிற்சிகள் வழங்குகின்றனர்.
கடலுக்கு செல்லும் மீனவர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல், எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்து விடுகின்றனர். முன்பெல்லாம் ஆழ்கடலிலும் நீந்த தெரிந்த மீனவர்கள் இருந்தனர். இப்போது கடலுக்கு செல்பவர்களில் சிலருக்கு நீந்த கூட தெரியாத நிலை உள்ளது; இது கவலையளிக்கிறது.
தானியங்கி வசதி
இதனால், சில இழப்புகள் ஏற்படுகின்றன. கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் சிலர், தங்கள் உதவிக்காக வடமாநில மீனவர்களை உடன் அழைத்துச் செல்கின்றனர். அவர்களில் பலருக்கு முறையான நீச்சல் தெரிவதில்லை. நீச்சல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என, அனைத்து மீனவர்களும், உயிர் காக்கும், 'லைப் ஜாக்கெட்' அணிய வேண்டும்.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து, படகில் சட்டவிரோதமாக வருவோரை கண்காணித்து வருகிறோம். இவர்களை ஏமாற்றி, படகில் இங்கு அனுப்பி விடுகின்றனர். இவ்வாறு வருவது சட்டவிரோதமானது.
அதுபோன்ற படகுகள் வாயிலாக நடக்கும் தங்கம் மற்றும் போதை பொருள் கடத்தல்களை தடுக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது, பாதுகாப்பை அதிகரித்ததன் விளைவாக, கடத்தலில் ஈடுபடுவோர், மற்ற தொழில் செய்து பிழைக்கலாம் என, சென்று விட்டனர். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
மீனவர்களின் படகு களில், ஏ.ஐ.எஸ்., என்ற தானியங்கி அடையாள அமைப்பு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், மீனவர்கள் எவ்வளவு துாரத்தில் செல்கின்றனர், எங்கு செல்கின்றனர், சந்தேகிக்கும்படி ஏதேனும் உள்ளதா என்பதை கண்காணிக்க முடியும்.
'நாவிக்' எச்சரிக்கை
மேலும், கடலுக்கு செல்லும் படகுகள் மற்றும் மீனவர்களின் விபரங்கள் குறித்து தகவல் தருமாறு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நீண்ட தொலைவு செல்லும் படகுகளில், 'வாக்கி டாக்கி' இயங்காமல் போகலாம். அதற்காக, 'நாவிக்' செயற்கைக்கோள் வாயிலாக எச்சரிக்கை தரப்படுகிறது. ஆபத்து நடக்கும் பட்சத்தில் விரைந்து மீட்க இது உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக உதவுவதிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், கடலோர காவல்படை முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.