தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் ஒழிக்கப்பட வேண்டும்: சீமான்
தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் ஒழிக்கப்பட வேண்டும்: சீமான்
ADDED : மார் 05, 2026 07:16 AM

சென்னை: ''என்னை போன்று ஸ்டாலின், பழனிசாமியால் பணம் கொடுக்காமல், ஒரு ஓட்டை கூட வாங்க முடியாது. கூட்டணி வைக்காமல், நாங்கள் வெற்றி பெறுவோம்,'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சென்னை மண்டல வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
நான்கு முறை தேர்தலை சந்தித்து தோற்றாலும், ஐந்தாம் முறையாக தனித்து போட்டியிடுகிறோம்.
கூட்டு களவாணிகள் தமிழக மக்கள் அடிமைப்பட்டு கிடக்கின்றனர். இங்கே அரசியல் என்பது இலவசத்துக் கானதாக உள்ளது.
நாட்டின் அரசியல் தலைவரை, ஜாதியும், மதமும், பணமும், சாராயமும் தான் முடிவெடுக்கும் என்றால், அவை எப்படி அரசியலாகும்.
அந்த தெருவில் 2,000 ரூபாய் கொடுத்து விட்டனர். இந்த தெருவில் தரவில்லை என போராடுவோரும் உண்டு.
வங்கிகள், மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இருந்தும், 1.31 கோடி மகளிருக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., - பா.ஜ., இரண்டும் கூட்டு கள வாணிகள். இங்கே, மக்கள் அரசியல் இல்லை.
நாம் ஆட்சிக்கு வந்த பின், பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிப்போம். துாய தமிழன் நாடு உருவாக்கப்படும்.
கூட்டணி போவது தான், மற்றவர்களுக்கு பிரச்னை. தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் ஒழிக்கப்பட வேண்டும்.
பா.ஜ., வரக்கூடாது என்றால், காங்கிரஸ் வரலாமா? எப்படி காங்கிரசை புனிதப்படுத்துகின்றனர். தமிழகத்தின் கச்சத்தீவு போன்ற தீய திட்டத்திற்கு, காங்கிரஸ்காரர்கள் தான் கையெழுத்திட்டனர்.
என்னை தேடுவர் உரிமை, கருணை, குருணைத் தொகை எல்லாம் கிடையாது. ஆட்சி முறை மாற்றம் வேண்டும். ஸ்டாலின் மற்றும் பழனிசாமி தொகுதிகளில் பணம் கொடுக்காமல், தேர்தலில் யாராவது ஒரு ஓட்டு போடச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர்கள் வீட்டிலேயே பணம் வாங்காமல் ஓட்டு போடுவரா எனத் தெரியவில்லை.
அநீதியும், அக்கிரமமும் அதிகரிக்கும்போது, மக்கள் என்னை தேடுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.

