UPDATED : ஜன 30, 2025 09:26 AM
ADDED : ஜன 30, 2025 07:46 AM

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பிரபல குத்துச்சண்டை வீரர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் - ராதா தம்பதியினரின் மகன் தனுஷ்,24. குத்துச்சண்டை வீரரான இவர், தமிழகம் சார்பில் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
போலீஸ் பணிக்காக தயாராகி வந்த இவர் மீது, வீட்டின் அருகே இளைஞர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், அவரது போலீஸ் கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு தனது வீட்டின் அருகே நண்பருடன் நின்றிருந்த போது, சில மர்ம நபர்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் கழுத்து மற்றும் உடல்பகுதிகளில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனால், சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற தனுஷின் நண்பர் அருணுக்கும் கழுத்துப் பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற ஐஸ் ஹவுஸ் போலீசார், தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த அருணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் குத்துச்சண்டை வீரர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.