சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன்; 14 நாட்கள் கழித்து ஆந்திராவில் மீட்பு
சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன்; 14 நாட்கள் கழித்து ஆந்திராவில் மீட்பு
ADDED : ஜன 26, 2025 10:25 PM

சென்னை: சென்னை ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட வட மாநில சிறுவன், 14 நாட்கள் கழித்து ஆந்திராவில் மீட்கப்பட்டான்.
கடந்த 12ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். தாயுடன் வந்த சிறுவன், தாய் கவனிக்காத வேளையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வடமாநிலத்திற்கு செல்லும் ரயிலில் சிறுவன் கடத்திச் செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நசரத்பேட்டை ரயில்நிலையம் அருகே சிறுவன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், சிறுவனை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, அவனை சென்னை அழைத்து வருகின்றனர். பிச்சை எடுப்பதற்காக சிறுவனை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. கடத்திய கும்பலில் 3 பெண்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.