
ஜனவரி 15, 1892
சென்னை, மயிலாப்பூரில், சிவானந்த முதலியார் - விசாலாட்சி தம்பதியின் மகனாக, 1892ல், இதே நாளில் பிறந்தவர் மயிலை சிவமுத்து எனும் முத்துக்குமாரசாமி.
குடும்ப சூழலால், ஏழாம் வகுப்பு வரை தான் படித்தார். பின், எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லுாரியில் ஓவியம் கற்றார். தந்தையின் மறைவால், அதுவும் தடைபட்டது. சென்னை உயர் நீதிமன்ற அச்சகத்தில் அச்சு கோர்க்கும் பணியில் சேர்ந்தார். ஓய்வு நேரத்தில் நுால்களை படித்து, தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார்.
சென்னை சிவனடியார் திருக்கூட்ட நிகழ்ச்சிகளில் பாடுவது, பால சைவ சபையில் சொற்பொழிவாற்றுவது என திறமைகளை வளர்த்துக் கொண்டார். தமிழறிஞர்களான ஆதிமூல முதலியார், மணி.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரிடம் பழகி, தமிழறிவையும் வளர்த்துக் கொண்டார். புலவர் தேர்வில் வெற்றி பெற்று, தமிழாசிரியரானார். ஹிந்தி ஒழிப்பு போராட்டத்திலும் பங்கேற்ற இவர், மாணவர் மன்றத்தை துவக்கியதுடன், பள்ளியையும் கட்டினார்.
'தமிழ்த் திருமண முறை, சிவஞானம், தமிழ் நெறிக்காவலர், என் இளமைப்பருவம், நித்தில வாசகம், முத்து கட்டுரைகள், முத்து பாடல்கள்' உள்ளிட்ட நுால்களை எழுதினார். இவர் தன், 76வது வயதில், 1968, ஜூலை 6ல் மறைந்தார்.
தமிழுக்கு தொண்டாற்றிய, புலவர் மயிலை சிவமுத்து பிறந்த தினம் இன்று!