பத்திரப்பதிவுக்கு லஞ்சமா? 'இ - மெயிலில்' புகார் தரலாம்
பத்திரப்பதிவுக்கு லஞ்சமா? 'இ - மெயிலில்' புகார் தரலாம்
ADDED : ஜன 09, 2024 03:56 AM

சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்கப்பட்டால், புகார் தெரிவிக்க மொபைல் போன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அறிக்கை:
தினமும், 10 ஆயிரம் ஆவணங்கள் பதியப்படுகின்றன. ஆவணங்களை பதிவுக்கு எடுத்து வரும் பொது மக்கள், அரசு கட்டணங்களை, 'ஆன்லைன்' வழியாக மட்டுமே செலுத்த முடியும். எனவே, கையில் பணம் கொண்டு வர தேவையில்லை.
இடைத்தரகர்களால் மக்கள் ஏமாற்றப்படக் கூடாது என்பதற்காக, இடைத்தரகர்களோ, ஆவண எழுத்தர்களோ, சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படக் கூடாது என, கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
எனவே, ஒவ்வொரு ஆவணத்திற்கும் பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுவது ஆதாரமற்ற புகார். மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆண்டுக்கு, 10,000 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டி வந்த பதிவுத்துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்ததால், கடந்த ஆண்டு வருவாய், 17,297 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
பதிவுத்துறை மீது களங்கம் கற்பிக்கும் வகையில், உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுவது, முற்றிலும் ஆதாரமற்ற உள்நோக்கம் கொண்ட செயல். இடைத்தரகர்களோ, ஆவண எழுத்தர்களோ, சார் பதிவாளர்களோ, அதற்கு மேல்நிலை அலுவலர்களோ, ஆவணப் பதிவுக்காக லஞ்சம் கேட்டால், 94984 52110, 94984 52120, 94984 52130 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அமைச்சரின் பெயரிலோ அல்லது அதிகாரிகளின் பெயரிலோ லஞ்சம் கேட்டால், ctsec@tn.gov.in என்ற இ - மெயில் முகவரியில், பதிவுத் துறை செயலருக்கு நேரடியாக புகார் அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.