வி.ஐ.டி., பல்கலையில் பி.டெக்., நுழைவுத்தேர்வு தொடங்கியது
வி.ஐ.டி., பல்கலையில் பி.டெக்., நுழைவுத்தேர்வு தொடங்கியது
UPDATED : ஏப் 29, 2026 09:44 PM
ADDED : ஏப் 29, 2026 09:22 PM
சென்னை:பி.டெக்., 2026ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, வேலுார் வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கியது.
பல்கலை வேந்தர் கோ.விசுவநாதன், தேர்வு நடப்பதை பார்வையிட்ட பின் கூறியதாவது:
வி.ஐ.டி., பல்கலையில், பி.டெக்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் 129 நகரங்களில், 212 மையங்களில் நடக்கிறது. மேலும், துபாய், அபுதாபி, கத்தார், மஸ்கட், பஹ்ரைன், குவைத், சிங்கப்பூர், மலேஷியா, ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களிலும் நுழைவுத் தேர்வு நடக்கிறது. மே 3ம் தேதி வரை தேர்வு நடக்கும்.
தேர்வு முடிவுகள், மே இரண்டாவது வாரம், www.vit.ac.in இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பின், கவுன்சிலிங் நடைமுறைகள் தொடங்கும். நுழைவுத் தேர்வில், தகுதி மதிப்பெண் ஒன்று முதல் ஒரு லட்சம் வரை பெற்ற மாணவ - மாணவியர், வேலுார், சென்னை, அமராவதி, போபால் ஆகிய நான்கு வளாகங்களில், ஒற்றை தகுதி மதிப்பெண் அடிப்படையில், தாங்களே தேர்வு செய்யலாம். அதற்கு மேல் உள்ளவர்களுக்கு, அமராவதி, போபால் வளாகத்தில் மட்டுமே இடம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும். கலை, அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு கிடையாது. அதற்கு, மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, பல்கலை துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி, இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, மாணவர் சேர்க்கை இயக்குநர் சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
***
