பட்ஜெட்: திட்ட தலைவர்கள் பெயரை பட்டியலிட்ட தங்கம் தென்னர
பட்ஜெட்: திட்ட தலைவர்கள் பெயரை பட்டியலிட்ட தங்கம் தென்னர
ADDED : பிப் 20, 2024 01:05 AM
தலைவர்கள் பெயரை பட்டியலிட்ட அமைச்சர்
சட்டசபையில் பட்ஜெட் உரையை வாசித்த, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முக்கிய திட்டங்களை செயல்படுத்திய தலைவர்களின் பெயரை கூறினார்.
அவர் கூறியதாவது:
கடந்த 100 ஆண்டுகளில், பழம்பெருமை மிக்க இந்த சட்டசபையில் முன் வைக்கப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற பல்வேறு நலத்திட்டங்கள், தமிழர்களை தலைநிமிரச் செய்தன. இத்தகைய முன்முயற்சிகள், வளர்ச்சிப் பாதையில் தமிழகம் வெற்றி நடை போட வழி வகுத்தன.
கடந்த 1894ல், சென்னை மாகாணத்தின், பொதுப்பணித்துறை செயலராக பதவி வகித்த, கர்னல் பென்னிகுயிக், 87 லட்சம் ரூபாய் மதிப்பில்,ஆங்கிலேயே அரசுக்கு அனுப்பி வைத்த முன்மொழிவு தான், முல்லைப் பெரியாறு அணையாக உருவெடுத்தது.
கடந்த 1924ம் ஆண்டு, நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர், சென்னை மாகாண முதன்மை அமைச்சராக இருந்தார். அப்போது முன்வைக்கப்பட்ட பட்ஜெட்டில் தான், முதன் முதலில் காவிரியின் குறுக்கே, மேட்டூர் நீர்த்தேக்கம் உருவாக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மொத்தம் 6.47 கோடி ரூபாயில், மேட்டூர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது.
முதன் முதலாக, 1921ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மன்ற தலைவராக பதவி வகித்த சர்.பிட்டி.தியாகராயர் காலத்தில், ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு 1 அணா செலவில், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில், மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.
பிற்காலத்தில் காமராஜரால், தமிழகம் எங்கும் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 1970ல் கருணாநிதி குடிசை மாற்று வாரியத்தை துவக்கினார். எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப் பட்டு, பின்னாளில் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்ட,சத்துணவு திட்டத்திற்கு, 1982 - 83 பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2001 - 02 பட்ஜெட்டில், மேல்நிலைக்கல்வி படிக்கும், ஆதிதிராவிட, பழங்குடியின பெண் குழந்தைகள் கல்வி வளர்ச்சியை உயர்த்த, 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் வழியாக, அந்த மாணவியரின் வாழ்வு சிறகடித்து பறக்க துவங்கியது.
இந்த வரிசையில், நம் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட, காலை உணவு திட்டத்திற்கு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டமான, மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
காலத்தை வென்று நிலைத்து நிற்கும் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களால் தான், தமிழகம் வளர்ச்சிப் பாதையில்,கம்பீரமாக பயணித்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

