'ஜி.எஸ்.டி.,யை நீங்க கட்டிட்டு அரசிடமிருந்து வாங்கிக்குங்க! எம்.எல்.ஏ.,க்களுக்கு ஸ்டாலின் அனுமதி
'ஜி.எஸ்.டி.,யை நீங்க கட்டிட்டு அரசிடமிருந்து வாங்கிக்குங்க! எம்.எல்.ஏ.,க்களுக்கு ஸ்டாலின் அனுமதி
ADDED : அக் 14, 2025 06:37 AM

சென்னை : எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஜி.எஸ்.டி., கட்டண சலுகையுடன், தலா, 3 கோடி ரூபாய் என, 702 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி மேம் பாட்டு நிதியாக, ஆண்டுதோறும், 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதனால், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி நிதியில், 54 லட்சம் ரூபாயை, ஜி.எஸ்.டி.,யாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொகுதி மேம்பாட்டு நிதிக்கு, ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு விதிக்கப்படும், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்தார்.
அதை நிறைவேற்றும் வகையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக, எம்.எல்.ஏ.,வுக்கு தலா 3 கோடி ரூபாய் வீதம், நடப்பாண்டு 702 கோடி ரூபாயை ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கி உள்ளது.
அதன்படி, எம்.எல்.ஏ.,க்கள் 3 கோடி ரூபாய்க்கு முழுமையாக, தொகுதி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியும்.
பணிகளை முடித்த பின், ஜி.எஸ்.டி., கட்டணம், 54 லட்சம் ரூபாயை, அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டு உள்ளார்.