போதைப்பொருள் கடத்தலில் முதலிடத்தில் நீடிக்கும் கஞ்சா
போதைப்பொருள் கடத்தலில் முதலிடத்தில் நீடிக்கும் கஞ்சா
ADDED : அக் 14, 2025 06:34 AM

சென்னை : தமிழகத்திற்கு கடத்தி வரப்படும் போதை பொருட்களில், கஞ்சாவே முதலிடத்தில் உள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தமிழக காவல் துறையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவை இணைத்து, அமலாக்கப் பணியக குற்றப் புலனாய்வு துறை செயல்படுகிறது.
இதன் கூடுதல் டி.ஜி.பி.,யாக அமல்ராஜ் பணிபுரிந்து வருகிறார். அவரது தலைமையில் மாநிலம் முழுதும் ரகசிய சோதனை நடத்தி, போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஆந்திரா, ஒடிஷா, மணிப்பூர், கர்நாடகா மற்றும் கோவாவில் இருந்து, தமிழகத்திற்கு அதிக அளவில் போதை பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் குறித்து ஆய்வு செய்ததில், முதலிடத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுதும் போதை பொருளுக்கு எதிராக, தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து வருகிறோம்.
அந்த வகையில், இந்த ஆண்டில், 19.17 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளோம். 20 கோடி ரூபாயுடன், 23,860 வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளோம்.
கஞ்சாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, இந்த ஆண்டில் செப்., வரை, 19,947 கிலோ பறிமுதல் செய்துள்ளோம். போதை பொருள் கடத்தல் தொடர்பாக, 13,941 பேரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.