சுயசான்று முறையில் 15,000 பேருக்கு கட்டட அனுமதி: மக்களிடம் ஆர்வம் அதிகரிப்பு
சுயசான்று முறையில் 15,000 பேருக்கு கட்டட அனுமதி: மக்களிடம் ஆர்வம் அதிகரிப்பு
ADDED : அக் 27, 2024 11:37 PM

சென்னை: சுயசான்று முறையில், கடந்த மூன்று மாதங்களில், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, 15,000 பேர் கட்டட அனுமதி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 10,000 சதுரடி வரையிலான குடியிருப்புகளுக்கு, கட்டட அனுமதி அளிக்கும் அதிகாரம், உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதை பயன்படுத்துவதில், பல்வேறு நிலைகளில், உள்ளாட்சி அமைப்புகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும், யார் கட்டட அனுமதிக்காக விண்ணப்பித்தாலும், அதன் விபரங்கள், அப்பகுதி அரசியல் புள்ளிகள் வரை செல்லும் நிலை இருந்தது.
புதிய திட்டம்
அரசியல் புள்ளிகள், வார்டு கவுன்சிலர்கள் போன்றோரை கவனித்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட கோப்புகள் நகரும் நிலையும் உருவானது.
இதற்கு தீர்வாக, உள்ளாட்சி அமைப்புகளில், அனைத்து வகையான கட்டட அனுமதி பணிகளும், ஒற்றை சாளர முறைக்கு மாற்றப்பட்டன. இதில், குறைந்த பரப்பளவில் வீடு கட்டுவோர், விரைவாக அனுமதி பெற புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி, 2,500 சதுரடி மனையில், 3,500 சதுரடி வரை வீடு கட்டுவோர், குறிப்பிட்ட சில ஆவணங்களை, ஆன்லைன் முறையில் சமர்ப்பித்தால் போதும். அடுத்த சில நிமிடங்களில், அவர் செலுத்த வேண்டிய கட்டண விபரம் தெரிவிக்கப்படும்.
அந்த கட்டணங்களை, ஆன்லைன் முறையில் செலுத்திய, சில மணி நேரங்களில் கட்டட அனுமதிக்கான ஒப்புகை சான்று, விண்ணப்பதாரருக்கு கிடைத்துவிடும். இதனால், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளின் பார்வைக்காக, மக்கள் காத்திருப்பது தவிர்க்கப்படுகிறது.
இதுகுறித்து நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஜூலையில் இத்திட்டம் துவங்கப்பட்டது. பொதுமக்கள் இதை பயன்படுத்துவதில், ஆர்வமாக உள்ளனர். மிக விரைவாகவும், வெளியார் தலையீடு இன்றி, கட்டட அனுமதி பெற, இத்திட்டம் மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.
கூடுதல் வசதி
தமிழகம் முழுதும் முதல் இரண்டு மாதங்களில், 9,000 பேருக்கு கட்டட அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், 15,000 பேருக்கு மேல் கட்டட அனுமதி பெற்றுள்ளனர்.
மக்களின் ஆதரவை அடுத்து, இதில் கூடுதல் வசதிகளை அனுமதிப்பது குறித்தும், மேலும் சில தளர்வுகளை வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.