ADDED : மே 07, 2025 12:51 AM

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில், தேனாற்று பாலம் அபாய வளைவில், நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பஸ்சும், தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு பால் பாக்கெட் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரியும், நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில், லாரியின் முன்பகுதி நொறுங்கியது. அதிலிருந்த லோடுமேன்கள் ஆறுமுகம், 57, கர்ணன், 31, தமிழ்பாண்டி, 27, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த லாரி டிரைவர் ரூபன், 22, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அரசு பஸ் டிரைவர் நாகராஜ், கண்டக்டர் செல்வேந்திர பிரசாத், பஸ் பயணியர் 10 பேர் படுகாயமடைந்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ரூபன் மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உயிரிழந்த ஆறுமுகம் மகள் திருமணம் இம்மாதம் 19ம் தேதி நடைபெற இருந்தது. இச்சம்பவத்தால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.