ADDED : ஜூலை 23, 2025 03:12 AM
அரியலுார்: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:
ஏழை, எளிய மக்களின் மீது சுமையை ஏற்றக்கூடாது என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். அதனால், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது.
'அ.தி.மு.க.,வை முழுதும் ஆக்கிரமித்து, அந்த இடத்தை நிரப்புவது பா.ஜ.,வின் கனவு' என்று, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தெளிவாக கூறியிருக்கிறார்.
தி.மு.க.,வின் ஓட்டுகளை பிரிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான், ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கட்சிகளை களத்தில் இறக்குவதை, பா.ஜ., வழக்கமாக கொண்டுள்ளது. இப்போதும் அந்த தந்திரத்தை பயன்படுத்துகின்றனர். ஆனாலும், அதை முறியடிப்போம்.
'வரும் 2036 வரை பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது' என்று சொன்னவர் தான் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. அப்படிப்பட்டவருக்கும் என்ன நேர்ந்ததோ தெரியவில்லை, அமித் ஷா முன் கைகட்டி வாய் பொத்தி அமர்ந்து, கூட்டணி அமைத்து விட்டார். ஆனால், வெளியில் வந்ததும் தைரியசாலி போல பேசத் துவங்கி விடுகிறார்.
இவ்வாறு சிவசங்கர் கூறினார்.