அகவிலைப்படி உயர்வு கோரி பஸ் ஓய்வூதியர்கள் உண்ணாவிரதம்
அகவிலைப்படி உயர்வு கோரி பஸ் ஓய்வூதியர்கள் உண்ணாவிரதம்
ADDED : பிப் 28, 2024 09:45 PM

சென்னை: அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி, போக்குவரத்து ஓய்வூதியர்கள், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், 1,000த்துக்கும் மேற்பட்டோர், சென்னை பல்லவன் சாலையில் நேற்று திரண்டனர். அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கத் தலைவர் கதிரேசன் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளுக்கும், அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. மதுரை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை காரணம் காட்டி, அரசு தாமதப்படுத்தி வருகிறது.
இதைவிடுத்து, குறைந்த ஓய்வூதியம் பெறும் எங்களின் நலன் கருதி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும். கடந்த, 15 மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாத பணப்பலன்களை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மார்ச், 10க்குப் பின் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

