'ரியல் எஸ்டேட்'டுக்காக பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம்: அ.தி.மு.க., தாக்கு
'ரியல் எஸ்டேட்'டுக்காக பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம்: அ.தி.மு.க., தாக்கு
ADDED : டிச 21, 2025 01:31 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.
அப்போராட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டை, சாக்கோட்டை அருகே ௭ கிலோ மீட்டர் துாரத்துக்கு அப்பால் உள்ள கருப்பூருக்கு மாற்ற திட்டமிட்டு செயல்படுகிறது தி.மு.க., அரசு. அதற்கான அவசியம் என்ன?
தற்போது இருக்கும் பஸ் ஸ்டாண்டில், 1,000 பஸ்கள் வந்து செல்வதற்கான இடவசதி உள்ளது. ஆனால், தற்போது 400 பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன.
போதுமான இட வசதியோடு, ஊரின் மையப்பகுதியில் இருக்கும் பஸ் ஸ்டாண்டை கருப்பூருக்கு மாற்றுவதன் பின்னணியில் ஆளுங்கட்சியினரின் ரியல் எஸ்டேட் தந்திரம் உள்ளது.
கருப்பூரில் ஆளுங்கட்சியினருக்கு சொந்தமாக நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது.
கும்பகோணம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான அன்பழகன், பஸ் ஸ்டாண்டுக்கு 10.58 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியதாகக் கூறுகின்றனர்.
கோவையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர், 2.24 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.
இவர்கள் இப்படி நிலங்களை தானமாக வழங்கியதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலுக்காக மட்டுமே பஸ் ஸ்டாண்ட் மாற்றப்படுகிறது.
கடந்த 2024 டிசம்பர் 30ல், பஸ் ஸ்டாண்ட் மாற்றம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, மேயர் மயங்கி விழுந்ததால், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனாலும், தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். அது எப்படி நடந்தது என தெரியவில்லை. மொத்தத்தில், ஏதோ முறைகேடு நடந்துள்ளது. அதற்கு அதிகாரிகள் துணை போகக் கூடாது.
புது பஸ் ஸ்டாண்ட் அமைப்பதை எதிர்த்து, தொடர்ந்து அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்.
இவ்வாறு பேசினார்.

