குளங்களாக மாறிய பஸ் நிலையங்கள் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கம்
குளங்களாக மாறிய பஸ் நிலையங்கள் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கம்
ADDED : அக் 16, 2024 01:13 AM

சென்னை:சென்னை மற்றும் புறநகரில் கனமழை காரணமாக, பல சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பயணியர் வருகை குறைவாக இருந்தது. இதன் காரணமாக, 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பயணியருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு முதல், இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
90 சதவீத பஸ்
கனமழை காரணமாக, சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை உட்பட பல சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பல இடங்களில், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், நீரில் செல்ல முடியாமல் தத்தளித்தன.
வடபழனி, தி.நகர், பிராட்வே, திருவான்மியூர், தாம்பரம், வியாசர்பாடி, அடையார், சைதாப்பேட்டை, பட்டினம்பாக்கம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, ஆவடி, அம்பத்துார், பெரம்பூர், செங்குன்றம், மாதவரம் பஸ் நிலையங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட பணிமனைகளில், மழைநீர் தேங்கியது.
சென்னையில் பல்வேறு வழித்தடங்களில், நேற்று காலை, 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 11:00 மணிக்கு பின், பல இடங்களில் மழையின் வேகம் அதிகமாக இருந்தது.
அரும்பாக்கம், வடபழனி 100 அடி சாலை, சோழிங்கநல்லுார், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில், சாலைகளில் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்து மாற்றப்பட்டது.
சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால், அந்த வழியாக செல்ல வேண்டிய பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு பின், 50 சதவீத மாநகர பஸ்களே இயக்கப்பட்டன. மழைநீர் உள்ளே புகுந்து விடும் என்பதால், மொத்தம் உள்ள 228 தாழ்தள பஸ்களில், 40 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன.
காத்திருப்பு
இது குறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியது. எனவே, பெரிய அளவில் பாதிப்பு இல்லாத பிரதான வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன. தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ஒயர்லெஸ் வழியாக, டிரைவர்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்பட்டது.
பயணியர் வருகை இல்லாததால், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டன. ஒவ்வொரு பணிமனையில் இருந்தும் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறுகையில், 'கனமழையால் பொதுமக்கள் சொந்த வாகனங்களில் பயணிக்க முடியாத நிலையில், பொது போக்குவரத்தை நம்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
'ஆனால், பெரும்பாலான வழித்தடங்களில் மதியம் 2:00 மணிக்கு பின், குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், அத்தியாவசிய பணிக்கு செல்வோர், அவசரமாக பயணிக்க வேண்டியோர், பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது' என, வேதனை தெரிவித்தனர்.