நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே பஸ்கள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்
நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே பஸ்கள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்
ADDED : ஜன 29, 2024 03:13 PM

சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் டி.என்.எஸ்.டி.சி (TNSTC) பஸ்கள் நாளை (ஜன.,30) முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டு, 2002ல் திறக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை நகருக்குள் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு அடிப்படை வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களும், ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்திற்கு பஸ் ஸ்டாண்டு மாற்றியதால் பயணியர் பெரியளவில் அதிருப்தியடையவில்லை. மேலும், சில பஸ்கள் கோயம்பேடு வரையிலும் இயக்கப்பட்டு வந்தன.
இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர் கோயம்பேடில் ஏறலாமா, கிளாம்பாக்கத்தில் ஏறலாமா என்ற குழப்பத்துடன் இருந்து வந்தனர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு என்று பிரத்யேகமாக பயன்பாட்டிற்கு வந்த இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து எஸ்.இ.டி.சி, ஆம்னி பஸ்கள் மட்டும் இயக்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது டி.என்.எஸ்.டி.சி பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி “நாளை முதல் டி.என்.எஸ்.டி.சி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது, கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும். செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படும். மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் 20 சதவீத பஸ்கள் மாதவரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும்” என்று போக்குவரத்துதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.