வங்கி கடன் தொகை விவகாரம் தொழிலதிபர் பெரியசாமி விளக்கம்
வங்கி கடன் தொகை விவகாரம் தொழிலதிபர் பெரியசாமி விளக்கம்
ADDED : ஆக 14, 2025 03:25 AM
சென்னை:''வங்கி கடன் தொகைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என, தொழில் அதிபர் பெரியசாமி தெரிவித்தார்.
'பத்மாதேவி சுகர்ஸ் லிமிடெட்' நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 120.84 கோடி ரூபாய் கடன் வாங்கி, சம்பந்தமே இல்லாத நிறுவனங்களுக்கு, அனுப்பி உள்ளது. இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், ஆலை அதிபர்களுக்கு சொந்தமான, திருச்சி மற்றும் தென்காசியில் உள்ள இடங்களிலும் சோதனை செய்தனர்.
கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களை நடத்தி வரும், பி.ஜி.பி., குழுமத்தின் தலைவர் பழனி ஜி.பெரியசாமியின் நுங்கம்பாக்கம் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டதாக, தகவல் வெளியானது.
இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:
சி.பி.ஐ., அதிகாரிகள், நான் 'பத்மாதேவி சுகர்ஸ் லிமிடெட்' நிறுவனத்திடம் வாங்கிய கடன் குறித்து விசாரிக்க வந்தனர். ஆனால், எனது வீடு, ஹோட்டல், கல்வி நிறுவனங்கள் என, ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
எனக்கும், பத்மாதேவி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் வாங்கியதில்லை.
கடந்த, 2015ம் ஆண்டு, சர்க்கரை ஆலை கூட்டமைப்பு தலைவராக இருந்தபோது, பத்மாவதி நிறுவன பட்டேல் சகோதரர்கள் நெருக்கமாக இருந்தனர். தொழில் அபிவிருத்திக்காக, அந்நிறுவனத்திடமிருந்து தான், 15 கோடி ரூபாய் கடன் பெற்றேன்.
அதை, 2023க்குள் முறைப்படி அடைத்து விட்டேன். காஞ்சிபுரத்தில் எனக்கு அலுவலகம் கிடையாது. சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.