UPDATED : நவ 18, 2025 08:53 AM
ADDED : நவ 17, 2025 11:48 PM

சென்னை: முருகப்பா குழும முன்னாள் தலைவர் வெள்ளையன், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த 125 ஆண்டு கால பாரம்பரியமிக்க முருகப்பா குழுமத்தின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வெள்ளையன், அக்குழுமத்தில் மட்டுமின்றி நாட்டின் தொழில் துறையில் அனைவராலும் மதிக்கப்படும் நபராக திகழ்ந்தவர்.
பல தசாப்தங்களாக முருகப்பா குழுமத்தை சிறப்பாக முன்னேற்றப் பாதையில் வழி நடத்தியவர். கோரமண்டல் இன்டர்நேஷனல், இ.ஐ.டி., பாரி உட்பட பல நிறுவனங்களின் இயக்குநர் வாரியத்தில் பங்கேற்றவர் வெள்ளையன். கொனோரியா கெமிக்கல்ஸ், எக்சிம் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஆகியவற்றிலும் அவரது அனுபவம் பயன்பட்டது.
கிட்டத்தட்ட 90,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முருகப்பா குழுமத்தை தாண்டி, இந்திய தொழில் துறை அமைப்புகளிலும் கணிசமாக பங்காற்றியவர். சதர்ன் இந்தியா சேம்பர் ஆப் காமர்ஸ், பெர்டிலைசர் அசோசியேஷன் ஆப் இந்தியா, சுகர் மில்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றில் வெள்ளையன் திறம்பட செயல்பட்டார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இரங்கல்
திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''கோரமண்டல் இன்டர்நேஷனல் தலைவரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான வெள்ளையன் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழகத்தின் முன்னணி தொழில்துறை வல்லுநராக விளங்கியதுடன், பல்வேறு மக்கள் பணிகளையும் மேற்கொண்டவர். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்'' என குறிப்பிட்டுள்ளார்.

