பொங்கல் தொகுப்பு வாங்கிட்டு போங்க: ரேஷன் கார்டுதாரர்களுக்கு போனில் அழைப்பு
பொங்கல் தொகுப்பு வாங்கிட்டு போங்க: ரேஷன் கார்டுதாரர்களுக்கு போனில் அழைப்பு
ADDED : ஜன 14, 2025 06:38 AM
மந்தாரக்குப்பம்: பொங்கல் தொகுப்பு வாங்க வருமாறு, ரேஷன் கடை ஊழியர்கள் போனில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் தொகுப்பாக வழங்கப்படுகிறது. கடந்தாண்டை போல, பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.1000 ரொக்கம் வழங்கப்படாததால், பொங்கல் தொகுப்பு வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
அதனால், பல ரேஷன் கடைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதையடுத்து, ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன்கார்டுதாரர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பொங்கல் தொகுப்பு பெற்றுச் செல்லுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

