இரு துப்பாக்கிகள் வாங்கினால் ஒன்று இலவசம்: கைதான பீஹார் வாலிபர் வாக்குமூலம்
இரு துப்பாக்கிகள் வாங்கினால் ஒன்று இலவசம்: கைதான பீஹார் வாலிபர் வாக்குமூலம்
ADDED : மார் 25, 2024 05:40 AM

சென்னை : 'இரண்டு லட்சம் ரூபாய்க்கு, இரண்டு துப்பாக்கி வாங்கினால், ஒரு துப்பாக்கி இலவசம் என, தமிழக ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தேன்' என, பீஹார் வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், சென்னை திருமங்கலத்தில் ஹோட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த, ஒற்றைக்கண் ஜெயபால், 63, உள்ளிட்ட ரவுடிகள், 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 4 துப்பாக்கிகள், 86 தோட்டாக்கள், 10 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்பின், இவர்களுக்கு துப்பாக்கி, 'சப்ளை' செய்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்மாயில், 38, கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இஸ்மாயில் மற்றும் ரவுடிகள், 12 பேரை, திருமங்கலம் போலீசார், 10 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
போலீசாரிடம் இஸ்மாயில் அளித்துள்ள வாக்குமூலம்:
எங்கள் மாநிலத்தில், முங்கர் என்ற மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலை செயல்படுகிறது. உள்ளூரில், 'கட்டாஸ்' என, துப்பாக்கிகளை அழைப்போம். இந்த துப்பாக்கிகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது போல முத்திரையிடப்படும்.
எங்கள் கூட்டாளிகள், உ.பி., மற்றும் மேற்கு வங்கத்திலும், கள்ளத்துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயலில் ஈடுபடுவோருக்கு துப்பாக்கி சப்ளை செய்ய, பல நிலைகளில் ஏஜன்டுகள் உள்ளனர். பிஸ்டல், ரிவால்வர் வகை துப்பாக்கிகள் தான் அதிகம் தயாரிப்போம்.
ஏஜன்டுகள் ஒவ்வொருவருக்கும், எவ்வித தொடர்பும் இருக்காது. சுண்டு விரலை உயர்த்தி காட்டினால் போதும்; துப்பாக்கி வாங்க வந்தவரை அடையாளம் கண்டுகொள்வோம்.
துாத்துக்குடியைச் சேர்ந்த தம்பிராஜா என்ற ரவுடி, 15 ஆண்டுகளாக எங்களுடன் தொடர்பில் உள்ளார். இவர் வாயிலாகத் தான், தமிழகத்தில் உள்ள, ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்து வந்தோம்.
2 லட்சம் ரூபாய்க்கு இரண்டு துப்பாக்கி வாங்கினால், அதை வாங்கிக் கொடுக்கும் நபருக்கு ஒரு துப்பாக்கியை இலவசமாக வழங்குவோம். அந்த வகையில், தம்பிராஜாவுக்கும் துப்பாக்கி வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

