சிறையில் அமைச்சரவை கூட்டம்: பா.ஜ., முன்னாள் தலைவர் கிண்டல்
சிறையில் அமைச்சரவை கூட்டம்: பா.ஜ., முன்னாள் தலைவர் கிண்டல்
ADDED : ஏப் 28, 2025 05:40 AM

சென்னை : ''தி.மு.க., ஆட்சியில் அமைச்சரவை கூட்டம், சிறையிலோ அல்லது நீதிமன்றத்திலோ நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவர்கள் எங்களை பார்த்து, 'கூடா நட்பு' என்கின்றனர்,'' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
காஷ்மீரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில், நாம் பிரதமருக்கு வலு சேர்க்க வேண்டும். இந்த சம்பவத்தில், விமர்சிக்கக்கூடிய வகையில் கருத்துக்களை தெரிவிப்பவர்கள், நாட்டிற்கு எதிரானவர்கள் என்று தான் கருத வேண்டும்.
விமர்சிப்பவர்கள் எதுவும் பேசாமல், அமைதியாக இருப்பது நல்லது. காஷ்மீர் தாக்குதலுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில், பா.ஜ.,வோடு மற்ற கட்சிகள் இணைந்திருப்பது, ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய் களத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவர் பா.ஜ.,வை எதிர்க்க வேண்டும் என எதிர்க்காமல், முழு எதிர்ப்பையும், தி.மு.க., கூட்டணியிடம் காட்ட வேண்டும்.
கட்சியில் குழந்தைகள் அணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை தவிர்க்க வேண்டும். கட்சியில் உள்ள குழந்தைகள், விஜய் பின்னால் வந்து, படிப்பதை நிறுத்தி விடக்கூடாது.
தி.மு.க., ஆட்சியில் அமைச்சரவை கூட்டம், சிறையிலோ அல்லது நீதிமன்றத்திலோ நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தி.மு.க.,வினர் ஒவ்வொருவர் பெயரிலும், பல வழக்குகள் உள்ளன. இப்படி உள்ள தி.மு.க.,வினர், எங்களை பார்த்து, 'கூடா நட்பு' என்கின்றனர். தி.மு.க., கூட்டணி மக்களால் 'தேடாக் கூட்டணி'யாக மாறப் போகிறது.
காஷ்மீர் பிரச்னையில், பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக யாரும் பதிவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

