ADDED : மார் 05, 2024 06:22 AM

சென்னை: அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாற்று புத்தக வெளியீட்டு விழா, சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி, நுாலை வெளியிட்டு பேசியதாவது:
ஐரோப்பாவுக்கு செல்லும் முன் கிறிஸ்துவம், இந்தியாவிற்கு வந்தது. வெளியில் இருந்து வந்த சிலர், நம் நாட்டின் சனாதன தர்மத்தின் படி அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அழிக்க முயன்றனர்.
சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், ராமர், கிருஷ்ணா, வள்ளலார், அய்யா வைகுண்ட நாராயணன் போன்றோர், அவதாரங்களை எடுத்துள்ளனர்.
கிழக்கிந்திய கம்பெனி, ஆரம்பத்தில் வணிகத்தில் மட்டுமே ஈடுபட்டு, 1757ல் வங்காள மாகாணத்தை கைப்பற்றியது. மொழி, உணவு, கலாசார மற்றும் பண்பாடுகளில் வேறுபட்டு இருந்தாலும், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக திகழ்ந்தது.
மக்கள் சனாதன கோட்பாட்டின் அடிப்படையில், ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.
இந்த ஒற்றுமை, கிழக்கிந்திய கம்பெனிக்கு, இந்தியாவை அடிமைப்படுத்த பெரும் சவாலாக இருந்தது. அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு நாடுகளை அடிமையாக்கியதைபோல், இந்தியாவை அடிமையாக்கவும், சனாதன தர்மத்தை அழிக்கவும், பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது.
இந்தியாவை ஆள்வதற்கு, கிறிஸ்துவ மதமாற்றத்தை கொள்கையாக பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. 1813ம் ஆண்டு, பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல், ஜி.யு.போப் உள்ளிட்டோர், இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நுால் போலியானது. மெட்ராஸ் மாகாணத்தில், மக்களை கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு உட்படுத்தினர். ஏற்கனவே, இங்கு நடத்தப்பட்டு வந்த பள்ளிகள் மூடப்பட்டன.
ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில், தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தியாவில் சனாதனத்தை அழிக்கவும், கிறிஸ்துவ மதத்தை பரப்பவும், 1830ல் பிரிட்டிஷ் அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது.
பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து, 1839ம் ஆண்டில், மெட்ராஸ் மாகாண மக்கள் 90,000 பேர் கையெழுத்திட்டு, பிரிட்டிஷ் அரசிடம் வழங்கினர். குழந்தைகளை கிறிஸ்துவ மதமாற்றம் மேற்கொள்வதற்கும், மதம் மாறினால் தான் பள்ளிகளில் இடம் கிடைக்கும் என்ற பிரிட்டிஷ் கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அய்யா வைகுண்டரின் கனவை நனவாக்கும் பணியில், பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

