இலங்கையுடன் வர்த்தகம் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
இலங்கையுடன் வர்த்தகம் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
ADDED : நவ 28, 2024 09:47 PM
நாகப்பட்டினம்:நாகையில் இருந்து இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு வர்த்தக ரீதியாக சரக்குகளை கப்பலில் அனுப்பி வைக்க, ஏற்றுமதியாளர்களுக்கு கலெக்டர் ஆகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முயற்சியால், நாகையில் இருந்து இலங்கை, காங்கேசன் துறைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து, 2024 ஆகஸ்டில் துவக்கப்பட்டது. தற்போது, 150 பயணியருடன் வாரத்திற்கு மூன்று முறை இரு வழிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மாலத்தீவுகள், இலங்கை, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் காங்கேசன் துறை மற்றும் பிற இடங்களுக்கு கடலுார், நாகை துறைமுகங்களில் இருந்து சரக்குகள் கையாள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சந்தை நிலவரப்படி வேளாண் பொருட்கள், மீன் சார்ந்த பொருட்கள் மற்றும் இதர நுகர்வுப்பொருட்கள், 75,000 டன் ஆண்டொன்றுக்கு கையாள வாய்ப்பு உள்ளது. வரும் ஆண்டுகளில் பன் மடங்காக அதிகரிக்கும்.
நாகை, கடலுார் துறைமுகங்களில் சிறிய அளவிலான பாய்மர கப்பல்கள், மிதவைகள் கையாள்வதற்கு தேவையான கட்டமைப்பு மற்றும் அனுமதிகளும் தயாராக உள்ளன. எனவே, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், முகவர்கள், மரக்கல மிதவை உரிமையாளர்கள் இதை பயன்படுத்தி, குறைந்த செலவில் சேவை பெறலாம்.
கூடுதல் விபரங்களுக்கு நாகை துறைமுக அலுவலர்- 94425 59978, கடலுார் துறைமுக அலுவலர் -94422- 43225 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

