நாளை ஊதிய ஒப்பந்த பேச்சு; தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு
நாளை ஊதிய ஒப்பந்த பேச்சு; தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு
ADDED : டிச 26, 2024 12:57 AM
சென்னை : போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு, சென்னையில் நாளை நடக்க உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும், 1.08 லட்சம் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, பேச்சு நடத்தி தீர்வு காணப்படுகிறது.
அந்த வகையில், 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்து, முதல்கட்ட பேச்சு, சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில், கடந்த ஆக., 27ல் நடந்தது. இதில், 85 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முதல்கட்ட பேச்சு என்பதால், அறிமுக கூட்டமாகவே நடந்தது. இதில், கடந்த காலங்களை விட, சங்கங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், மாநில பிரதிநிதித்துவம் பெற்ற சங்கங்கள் பேச, கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதன்பிறகு, அடுத்தகட்ட பேச்சுக்கு அழைக்காததால், தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, அடுத்த மாதம், பொங்கல் பண்டிகை வர உள்ளதால், போராட்டங்களை தவிர்க்க, அடுத்தகட்ட பேச்சுக்கு, போக்குவரத்து துறை அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை, குரோம்பேட்டையில் நாளை நடக்கும் முத்தரப்பு பேச்சில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., அ.தொ.பே., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
நாளை மறுநாள் நடக்கும் பேச்சில், இதர சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் பேச்சு, நாளை, நாளை மறுநாள் நடக்கிறது.
ஊதிய உயர்வு, ஓய்வூதியரின் பிரச்னை உள்ளிட்டவை குறித்து பேசப்படும்' என்றனர்.