ADDED : ஏப் 17, 2026 07:16 AM

வாக்காளர்களுக்கு தி.மு.க., வேட்பாளர்கள் பணம் கொடுத்தால், அதை வீடியோ எடுத்து புகார் அளிக்க, பாக்கெட்டில் அணியும் கேமராவுடன், த.வெ.க.,வினர் இரு சக்கர வாகனங்களில் ரோந்து வருகின்றனர்.
இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனால், வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தி.மு.க., வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே, தி.மு.க.,வினர், 8,000 ரூபாய் கூப்பன் மாதிரியை வழங்கியது குறித்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தபோது, ஆதாரங்களை காட்டுங்கள் என்றனர். கூப்பன் வழங்கிய இடம், அதை வழங்கிய நபர்கள் குறித்து தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, பணப்பட்டுவாடா செய்யும்போது, ஆதாரத்துடன் புகார் அளிக்க, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள த.வெ.க., நிர்வாகிகள், தங்கள் பாக்கெட்டில் சிறிய கேமராவை பொருத்திக் கொண்டு, தி.மு.க.,வினர் கூடும் இடங்களை, இரவில் நோட்டமிட்டு வருகின்றனர். பணப்பட்டுவாடா நடந்தால், உரிய ஆதாரங்களோடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிப்பர். இந்த பணிக்காக, ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 20 பேர் பாக்கெட் கேமராவுடன் வாகனங்களில் ரோந்து வருகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
