குளியலறையில் கேமரா வைத்த விவகாரம்: முக்கிய குற்றவாளி டில்லியில் சுற்றிவளைப்பு
குளியலறையில் கேமரா வைத்த விவகாரம்: முக்கிய குற்றவாளி டில்லியில் சுற்றிவளைப்பு
ADDED : நவ 07, 2025 11:50 PM

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில், ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, லாலிக்கல் அருகே, 'விடியல் ரெசிடென்சி' என்ற பெயரில் விடுதி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இதில், 6,250 பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். நான்காவது பிளாக்கில் உள்ள, 8வது மாடியில் ஒரு குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததை நவ., 2ம் தேதி வடமாநில பெண் தொழிலாளி ஒருவர் கவனித்தார். அவர், விடுதி பெண் வார்டன் மற்றும் டாடா நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
ஆனால், அலட்சியமாக இருந்ததால் நவ., 4ம் தேதி முதல் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். ரகசிய கேமரா வைத்ததாக, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா, 23, என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
இவரது உறவினரும், காதலருமான பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு, பீஹார், ஜார்க்கண்ட், ஒடிஷா மாநிலத்தில் மாறி, மாறி வசித்து வந்த ரவி பிரதாப் சிங், 29, கேமராவை கொடுத்து குளியலறையில் வைக்குமாறு கூறி, அதன் மூலமாக வீடியோ எடுத்தது தெரிந்தது.
அவர் தன் சொந்த ஊருக்கு தப்பி செல்வதை அறிந்த போலீசார், அங்கு விரைந்த நிலையில், டில்லி சென்று, அங்கிருந்த வேறு மாநிலத்திற்கு செல்ல ரவி பிரதாப் சிங் திட்டமிட்டிருந்தார்.
இதையறிந்து டில்லி சென்ற தனிப்படை போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.
குளியலறைகளில் ரகசிய கேமராக்களை வைத்து, பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து, அதை இணையதளங்களுக்கு விற்று பணம் சம்பாதிப்பதை, ரவி பிரதாப் சிங் வழக்கமாக வைத்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவரது மொபைல்போனில் வேறு ஏதாவது வீடியோக்கள் உள்ளதா என, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு முன் இதேபோல் விடுதிக்குள் கேமரா வைத்து, அதன் மூலம் வீடியோ எடுக்கப்பட்டதா என்பது குறித்தும், உத்தனப்பள்ளி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கைதான ரவி பிரதாப் சிங் ஒடியா மொழியில் பேசியதால், போலீசாருக்கு அவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் இருந்தது. அதனால் ஹிந்தி மற்றும் ஒடியா மொழி தெரிந்த நபரை வரவழைத்து, அவர் மூலமாக ரவி பிரதாப் சிங்கிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

