'சார்-பதிவாளராக செயல்படலாம் கூடுதல் அலவன்ஸ் கிடையாது!': பதிவுத்துறை பதிலால் அதிர்ச்சி
'சார்-பதிவாளராக செயல்படலாம் கூடுதல் அலவன்ஸ் கிடையாது!': பதிவுத்துறை பதிலால் அதிர்ச்சி
ADDED : அக் 18, 2024 11:45 PM

சென்னை: 'உதவியாளர்கள், பொறுப்பு சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பில் செயல்படலாம்; ஆனால், அதற்கான படித்தொகை கேட்க தகுதி இல்லை' என, பதிவுத்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 582 சார் - பதிவாளர் அலுவலகங்களில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், முழுநேர சார் - பதிவாளர்கள் இல்லை. அவர்களுக்கு பதிலாக, உதவியாளர்களே, பொறுப்பு சார் - பதிவாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களை தற்காலிக அடிப்படையில் தான் நியமிக்க வேண்டும், குறிப்பிட்ட நாட்களுக்கு பின், அந்த இடத்தில் முழுநேர சார் - பதிவாளரை நியமிக்க வேண்டும் என, பதிவுத்துறை தலைமை அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள் துணையுடன், பெரும்பாலான இடங்களில் உதவியாளர்களே, பல ஆண்டுகளாக பணியில் தொடர்கின்றனர்.
இவர்கள் தங்களை முழுநேர சார் - பதிவாளர் என்றே கூறுவதால், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.
இவர்களில் பணி மூப்பு அடிப்படையில், தகுதி உடையவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, முழுநேர சார் - பதிவாளர்களாக நியமிக்க வேண்டும் என, பணியாளர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் காலத்துக்கு, சம்பந்தப்பட்ட உதவியாளர்களுக்கு உரியபடி தொகையை வழங்க வேண்டும் என, தமிழக பதிவுத்துறை அலுவலர் சங்கம் சார்பில், அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.
அதற்கு, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்துள்ள பதில்:
இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், 'சி' பிரிவு பணியாளர்களாக வகைபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கூடுதல் பொறுப்புக்கான படி வழங்க, அடிப்படை விதிகளில் வழி இல்லை.
சார் - பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களை கூடுதல் பொறுப்பாக, இவர்கள் கவனித்தாலும் அதற்கான படி பெற தகுதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அடிப்படை விதிகளின்படி, உதவியாளர்கள் அவர்கள் நிலையில் உள்ள காலியிடங்களை மட்டுமே கூடுதல் பொறுப்பாக ஏற்க வேண்டும்.
சார் - பதிவாளர் பணிக்கான கூடுதல் பொறுப்பு படியை பெற தகுதி இல்லை என்றால், அவர்களை ஏன் அதில் நியமிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இந்த விஷயத்தில் அடிப்படை விதிகளை மீறி தான், உதவியாளர்கள் சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்படுகின்றனர் என்பதை, பதிவுத்துறை தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.