கள்ளுக்கடைகள் திறக்க முடிவா? ஆய்வு செய்வோம் என்கிறார் அமைச்சர்!
கள்ளுக்கடைகள் திறக்க முடிவா? ஆய்வு செய்வோம் என்கிறார் அமைச்சர்!
ADDED : ஜன 07, 2024 01:48 AM
ஈரோடு:''தமிழகத்தில் கள்ளுக்கடை திறந்தால், அரசுக்கு அதிக வருமானம் கிடைக்குமா என்பதை, ஆய்வு செய்தால் தான் தெரிந்து கொள்ள முடியும்,'' என, மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடில் அவர் அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, அமைச்சர் கே.என்.நேரு அளித்த வாக்குறுதிப்படி, ஈரோடு மாநகராட்சிக்கு, 300 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வருமான இலக்கு நிர்ணயித்து, 'டாஸ்மாக்' கடைகளில் மது விற்கப்படுவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுவது தவறு. மது விற்பனையில், அவ்வாறு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை.
அதேபோல, 'கள் இறக்கி விற்றால், அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்' என்றும், அண்ணாமலை கூறியுள்ளார். எவ்வாறு அப்படி மதிப்பிட்டார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்துதான் அறிந்து கொள்ள முடியும். மேலோட்டமாக சொல்லி விட முடியாது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கள் இறக்கி விற்க விவசாயிகளுக்கு உரிமம் வழங்க வலியுறுத்தி, கள் இயக்கம் போராடி வருகிறது.
'அரசு இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால், வரும், 21-ம் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் ஊருக்கு ஊர் நடத்தப்படும்' என, இயக்கத்தின் தலைவர் நல்லுசாமி அறிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், அமைச்சர் முத்துசாமியின் கருத்து, தங்களுக்கு சாதகமாக இருப்பதாக, இயக்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.