தனி பட்டா கோரியவருக்கு கூட்டு பட்டா; வருவாய் துறையில் இப்படி நடக்கலாமா?
தனி பட்டா கோரியவருக்கு கூட்டு பட்டா; வருவாய் துறையில் இப்படி நடக்கலாமா?
ADDED : அக் 14, 2025 12:20 AM

சென்னை, : வீடு, மனை வாங்குவோர் தங்கள் பெயரில், தனி பட்டா கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கு கூட்டு பட்டா வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், வீடு, மனை வாங்குவோர், அதற்கான பத்திரப்பதிவு செய்யும் போதே, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். இதில், உட்பிரிவு தேவை இல்லாத சொத்துக்களுக்கு, தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பெயர் மாற்றத்துக்கான விண்ணப்பங்களை, சார் - பதிவாளர் சரி பார்த்தால் போதும். இதில், வருவாய் துறை அதிகாரிகள் தலையிட வேண்டியதில்லை. இருப்பினும், சில சமயங்களில் ஆவண சரிபார்ப்பு, கூடுதல் விபரம் தேவை என்ற அடிப்படையில், விண்ணப்பதாரர்களை அதிகாரிகள் அழைக்கின்றனர். இதன்படி சென்றால் மட்டுமே, பட்டா மாறுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், கூட்டு பட்டாவில் உள்ள சொத்துக்களில், ஏதாவது ஒரு பாகத்தை வாங்கும் நபர்கள், தங்கள் பெயரில் தனி பட்டா கோரி விண்ணப்பிக்கின்றனர். இதில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து, புதிய உட்பிரிவு எண் ஒதுக்கி, அதன் அடிப்படையில் தனி பட்டா வழங்க வேண்டும்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் வாசு என்பவர் கூறியதாவது
சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய சொத்துக்கு, பட்டா பெயர் மாற்றம் நடக்கவில்லை. இதில், உட்பிரிவுடன் தனி பட்டா கோரி விண்ணப்பித்தேன். ஆனால், நில அளவையாளர் இல்லை என்று கூறி, ஏற்கனவே உள்ள கூட்டு பட்டாவில் என் பெயரை சேர்த்து, பட்டா பிரதியை இணையதளத்தில் அதிகாரிகள் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விசாரித்தால், உட்பிரிவுடன் தனி பட்டா வேண்டுமென்றால், மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்துகின்றனர். நில அளவை பணிக்கான நபர் இல்லை என்றால், அதற்கு மாற்று நடவடிக்கை என்ன என்று பார்க்க வேண்டும். அதை விடுத்து, கூட்டு பட்டாவில் புதிய உரிமையாளரை சேர்த்து விடுவது நியாயமா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பாக்ஸ் செய்தி
---------------
புகார் செய்யலாம்
வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனி பட்டா கோரிய விண்ணப்பங்களை வேறு பிரிவுக்கு மாற்றி, கூட்டு பட்டா கொடுப்பது தவறு தான். இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால், உரிய விபரங்களுடன் பொது மக்கள் புகார் அளிக்கலாம். தனியார் வாயிலாக நில அளவை பணி முடித்து, பட்டா வழங்க உரிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்த விபரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க, தாசில்தார்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
***