காவிரியில் அணை கட்ட முடியுமா? விவசாயிகள் மனுவுக்கு அரசு பதில்
காவிரியில் அணை கட்ட முடியுமா? விவசாயிகள் மனுவுக்கு அரசு பதில்
ADDED : அக் 20, 2024 01:26 AM
சென்னை:'நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டால் மட்டுமே, ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில், காவிரியின் குறுக்கே அணை கட்டும் கோரிக்கையை பரிசீலிக்க இயலும்' என, காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவு தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துஉள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரியில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து சேமிக்க, காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட வலியுறுத்தி, அரசிடம் மனு அளித்தார்.
அதற்கு காவிரி தொழில்நுட்ப குழுமம் தலைவர் சுப்பிரமணியன் அனுப்பியுள்ள பதில்:
கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில், அணை கட்ட திட்டமிட்டு உள்ளது.
அதன் நீர்பரப்பு பகுதி முழுதும், அம்மாநிலத்திலேயே அமைந்த போதிலும், பன்மாநில நதியாகிய காவிரி மற்றும் அதன் உப நதிகளில், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள அணைகள் தவிர, புதிதாக எந்த அணையும் கட்டக்கூடாது.
அதன் அடிப்படையிலேயே, மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகள் தவிர, விவசாயிகள் சங்கம் சார்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இம்மனுவில், கர்நாடக அரசு தன்னையும் மனுதாரராக இணைக்கக் கோரி, ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
இத்தகைய சூழலில், அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டால் மட்டுமே, தமிழக அரசு தங்கள் கோரிக்கையை பரிசீலிக்க இயலும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.