'இப்படியெல்லாம் பேசலாமா?' 'மாஜி' மந்திரிக்கு நீதிபதி 'குட்டு'
'இப்படியெல்லாம் பேசலாமா?' 'மாஜி' மந்திரிக்கு நீதிபதி 'குட்டு'
ADDED : பிப் 03, 2024 12:43 AM
சென்னை:முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா அ.தி.மு.க., - எம்.பி.,யுமான சண்முகத்துக்கு எதிரான, நான்கு வழக்குகளின் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 'சட்ட அமைச்சராக இருந்தவர் இப்படி பேசலாமா?' என்றும் உயர் நீதிமன்றம் கண்டித்தது.
விழுப்புரத்தில், 2022 ஜூலையில் நடந்த கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினை அவதுாறாக பேசியதாக, முன்னாள் அமைச்சர் சண்முகத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யவும், அதுவரை விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் சண்முகம் தாக்கல் செய்தார்; மேலும், மூன்று வழக்குகளிலும் தடை கோரியிருந்தார்.
இம்மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
சி.வி.சண்முகம் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதாடினார். நான்கு வழக்குகளின் விசாரணைக்கும் தடை விதித்த நீதிபதி, அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.விசாரணையின் போது, சண்முகத்துக்காக ஆஜராகியமூத்த வழக்கறிஞரிடம்நீதிபதி கூறியதாவது:
சட்ட அமைச்சராக இருந்தவர், தற்போது எம்.பி.,யாக இருப்பவர் பயன்படுத்திய வார்த்தைகளை பாருங்கள். ஏன் மீண்டும் மீண்டும் இது நடக்கிறது? கை தட்டல் வாங்குவதற்காக இப்படி பேசுவீர்களா? அவர் பேசியதை, நீதிமன்றத்தில் உங்களால் படிக்க முடியுமா; தயவு செய்து அவர் பேசியதை, இந்த நீதிமன்றத்தில் படித்து விடாதீர்கள்.
முதல் முறையாக, அவர் இவ்வாறு பேசவில்லை. ஆளும் அரசுக்கு எதிராக பேசலாம்; ஆனால், இப்படி பேசுவது சரியா?
இவ்வாறு நீதிபதி கூறினார்.

