ரூ.800 கோடி டிபாசிட் செய்யும்படி மின் வாரியத்திற்கு பிறப்பித்த உத்தரவு ரத்து
ரூ.800 கோடி டிபாசிட் செய்யும்படி மின் வாரியத்திற்கு பிறப்பித்த உத்தரவு ரத்து
ADDED : மார் 15, 2024 03:00 AM

சென்னை: தமிழக மின்வாரியம், வடசென்னை அனல்மின் நிலையம், சென்னை பெட்ரோலியம், மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களால், வடசென்னையில் காற்று மாசு ஏற்படுவதாக, பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பல்வேறு பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தது.
அதில், சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து மீட்பதற்கு நிதியத்தை ஏற்படுத்தவும், மணலி பகுதியில் இயங்கும், இந்த ஆறு நிறுவனங்களின் ஆண்டு வருவாயில், குறைந்தபட்சம் ஒரு சதவீதம் டிபாசிட் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக மின்வாரியம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி பார்த்தால், ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வழங்க வேண்டியதிருக்கும் என்றும், மின்வாரியத்தின் நிதி நெருக்கடியில் அது சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மற்ற நிறுவனங்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. மின்வாரியம் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''மின்வாரியத்தின் நிதி நிலைமையை பரிசீலிக்காமல், தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் மட்டும், மின்வாரியத்துக்கு 11,954 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த இழப்பு, 1.50 லட்சம் கோடியை தாண்டும். மின்வாரியம் தரப்பின் கருத்தை கேட்கவில்லை,'' என்றார்.
இதையடுத்து, மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதியத்துக்கு, டிபாசிட் செய்யும்படி, மின்வாரியம் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, நீதிபதிகள் ரத்து செய்தனர்.
உரிய நடைமுறையை பின்பற்றி, நிறுவனங்கள் வழங்க வேண்டிய இழப்பீட்டை, தீர்ப்பாயம் நிர்ணயிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.

